முதல்வருக்கு புதிய அலுவலக ஏற்பாடுகள் தண்டச்செலவு: இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. காட்டம்

திருப்பூர்: தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருக்கும் சூழ்நிலையில், முதல்வருக்கு புதிய அலுவலக ஏற்பாடுகள் தண்டச்செலவு எனத் திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தலைமைச்செயலகத்தின் 10வது மாடிக்கு முதலமைச்சரின் அலுவலகம் மாற்றப்படுவதாகவும், புதிய துணை நகரமாக புதிய தலைமைச்செயலகம் உருவெடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவருகிறது.

இதற்கான திட்ட மதிப்பீடு எவ்வளவு?. நிதிப் பற்றாக்குறை நிலவும் இந்த வேளையில், நிதி வருவாயை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இத்தகைய சூழலில் இவ்வாறான செலவு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத அவசியமா அல்லது வீண் தண்டச் செலவா?. செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்கத் திட்டமிட வேண்டிய அரசு, தேவையற்ற செலவுகளைத் தீவிரமாக மேற்கொள்வது சரியாக இருக்காது.

கடிவாளம் இல்லாத குதிரைப் பயணமும், இடிப்பாரை இல்லாத மன்னனின் பயணமும் ஆபத்தானது. இத்தகைய நடவடிக்கைகளில் அரசு கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். தவெக ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்துள்ள நிலையிலும் தவெக அரசின் செயல்பாடுகளை அக்கட்சியை சேர்ந்த எம்.பியும் மூத்த தலைவருமான சுப்பராயன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: