சென்னை: கடவுளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து கொடுத்தது தி.மு.க. ஆட்சி, கடவுளுக்கே மொட்டை போட்டது த.வெ.க. ஆட்சி என திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க.வின் பெயரும் குதிரை பேரத்தில் பயங்கரகமாக அடிபடுகிறது என்கிறார்கள் சிலர். இது பொல்லாத த.வெ.க.வின் ஸ்டைல். 100 கோடி கோயில் நிலத்தை விற்றது கடந்த 6ம் தேதி. இதில் திமுகவிற்கு என்ன சம்பந்தம்? தவெ.க அரசின் மோசடியை மறைக்க திமுகவையும் இழுப்பது.
குதிரை பேரம் என தவெகவை சொன்னால் உடனே திசை திருப்ப திமுகவையும் சேர்ப்பது. செந்தில் பாலாஜி அப்பாவி என்பதில் என்ன சந்தேகம், கரூர் தேர்தலில் செந்தில் பாலாஜியும், விராலிமலை தேர்தலில் பி.டி.அரசகுமாரும் அவர்களின் கண்ணை குத்துகின்றனர். கோயில் நிலங்கள் திமுக ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தன. இந்த ஆட்சியில் கோயில் நிலங்கள் சூறையாடப்படுகின்றன என இந்து அமைப்புகள் அறிக்கை விடுகின்றன.
சேகர்பாபு காலத்தில் தனியாரிடமிருந்த கோயில் நிலங்கள் 8 ஆயிரம் ஏக்கர் பறிமுதல் செய்யப்பட்டு, கோயிலில் 8 ஆயிரம் கோடி சொத்து பாதுகாக்கப்பட்டது. தவெக காலத்தில் கோயிலின் பலநூறு கோடி சொத்து அபகரிக்கப்படுகிறது. யார் லஞ்சம் கேட்டாலும், எங்க அண்ணனிடம் சொல்லுவேன் என சொல்லு என்கிறார் முதல்வர். ஆனால் சொந்த கட்சி வக்கீல், பட்டியல் இனத்தை சேர்ந்த ஞான சவுந்தரி, அரசு வழக்கறிஞர் பதவிக்கு 20 லட்சம் கேட்கிறார்கள் என குற்றம் சாட்டினால் நடவடிக்கை இல்லை. 45 நாளில் என்ன செய்யமுடியும் என்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்.
ஏன் செய்ய முடியாது. அமைச்சராக இருந்து கொண்டே அரசு நிகழ்ச்சியில் ஆபாச பாடலுக்கு டான்ஸ் ஆட முடியும். 40 நாட்களுக்குள் பல வேலைக்கு மத்தியில் பெண்கள் பேருந்தில் அவசரமாய் விடியலை எடுக்க முடியும். நான் முதல்வனை மாற்ற முடியும், ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை சமூக நீதித்துறை என மாற்ற முடியும். 100 கோடி சொத்தை எடுத்து முருகனுக்கே மொட்டை போட முடியும். 25 ஆயிரம் கோடி மணல் கொள்ளைக்கு அச்சாரம் போட முடியும்.
தமிழே படிக்காத வெங்கட்டை தமிழ்நாடு பிரதிநிதியாக டெல்லிக்கு அனுப்ப முடியும். போதை மருந்து கொடுத்து என்னை கெடுக்க சொன்னதே சரவணன் எம்எல்ஏ தான் என சொந்தகட்சி மகளிர் சொன்னால்கூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்த எம்.எல்.ஏ.வை பாதுகாக்க முடியும். பங்காரு லட்சுமணன் மீது ரூ.50,000 குற்றச்சாட்டுக்கே குற்றம் இல்லை என நிரூபித்துவிட்டு வா என அகில இந்திய பா.ஜ. தன் தேசிய தலைவரையே அனுப்பியபோது, அடிதடியில் ஈடுபட்டு வழக்கில் உள்ள நிதி அமைச்சர் மரிய வில்சனை அமைச்சரவையை விட்டு வெளியேற்றாமல் பாதுகாக்கும் கேவலத்தை த.வெ.க. அரசுக்கு 45 நாளில் செய்ய முடியும்.
திருடன் கையில் கொத்துசாவி கொடுத்தது போல தவறு செய்யும் அமைச்சர்களையே அமைச்சர்களாக 45 நாளில் பாதுகாக்க முடியும். திமுக. ஆட்சியில் மரணம் என்றால் தளபதி ஸ்டாலினை பார்த்து இன்றைய முதல்வர் அதிகாரிகள் மீது பழி போடாதீர்கள், அதிகாரிகள் தான் பொறுப்பு என்றால் நீங்கள் எதுக்கு ஆட்சியில் இருக்கிறீர்கள் என்பதும் த.வெ.க. ஆட்சியில் 45 நாளில் சபரிவர்மன் இறந்தாலோ 100 கோடி இடம் 2 கோடிக்கு பறிபோனாலோ அதிகாரிகள்தான் என அதிகாரிகள் மீது பழிபோடுவதும் இந்த 45 நாளில் முடிந்தது தானே. இவ்வாறு கூறி உள்ளார்.
