நீதியரசர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியை இரண்டாவது ஆண்டாக நடத்தின. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். முன்னதாக அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஜனநாயகத்தின் நான்கு முக்கிய தூண்கள் குறித்து கற்றுக்கொள்கிறோம். அவை சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை மற்றும் பத்திரிகைத்துறை. இந்த நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் மக்களுக்கான உண்மையான ஜனநாயகம் வலுப்பெறும். அரசியல் என்பது வேறு, நட்பு என்பது வேறு. நிர்வாக ரீதியாக ஏற்படும் தவறுகளை நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம். அந்தத் தவறுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உள்ளது.

பத்திரிகையாளர்மன்ற கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். சென்னை பத்திரிகையாளர் மன்றக் கட்டிடத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பத்திரிகையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதியரசர்கள், அதிகாரிகள் இணைந்து பங்கேற்கும் விளையாட்டு தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஆர்.டி.பெக், பத்திரிகையாளர் பி.எஸ்.ஜே. விக்ரம், அகில இந்திய வழக்கறிஞர்கள் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர் வேல்முருகன், தொழிலதிபர் சார்லஸ் வசந்த் குமார் மற்றும் பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Related Stories: