மீனம்பாக்கம்: ஹாங்காங்கில் இருந்து 217 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11.50 மணிக்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அது மீண்டும் நள்ளிரவு 12.50 மணிக்கு ஹாங்காங் செல்ல வேண்டும். அதில் செல்ல 220 பயணிகள் இருந்தனர். ஆனால், விமானம் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. ஹாங்காங்கில் கடுமையான தைபூன் நவுல் (Typhoon Noul) புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு பயணிகளுக்கு ஏற்கனவே அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் தகவல் கிடைக்காத பயணிகள் மட்டும் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் பயணிகள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து ஹாங்காங் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று (ஞாயிறு) நள்ளிரவு 11.50 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானமும் புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, சென்னைக்கு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் ரிமோட் ஃபே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் திங்கட்கிழமை (இன்று) அதிகாலை பயணிகளுடன், ஹாங்காங் புறப்பட்டு செல்லும்.
