கோவை: தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ராம் சரண், கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த ‘பெத்தி’ என்ற படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது, அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக, நேற்று ராம் சரண் கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக அவருடன் தந்தை நடிகர் சிரஞ்சீவி, ராம் சரண் மனைவி உபாசனா மற்றும் குடும்பத்தினர் ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு வந்தனர். ராம் சரண் கை மணிக்கட்டில் இன்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. சிகிச்சைமுடிந்து ஓய்வெடுத்த பின்பு, சில வாரங்களில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.
