தவெகவில் அதிமுக அகதிகளா? அமைச்சர் செங்கோட்டையன் டென்ஷன்

ஈரோடு: ஈரோட்டில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெகவில் அதிமுக அகதிகள் அதிகமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘யார் அகதிகளாக ஆகப் போகிறார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்’’ என்றார்.

நீட் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, ஜனநாயகன் படத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு, ‘‘இதற்கு பதில் சொன்னால் மனசு சங்கடம் ஏற்படும். நாங்கள் மூத்த அரசியல்வாதிகள். அதனால் இதெல்லாம் வேண்டாம். திரைப்படத்தில் சரித்திரம் படைத்த விஜய்யின் கடைசி படத்தை கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையெல்லாம் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வந்திருந்தால் 234 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம்’’ என்றார். காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவது தொடர்பான கேள்விக்கு, ‘‘கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தமிழக அரசின் பிரதிநிதியாக கர்நாடகா மாநிலத்திற்கு சென்று காவிரி விவகாரம் குறித்து பேசினார்கள்.

இப்போது முதல்வர் விஜய் நேரடியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்கிறார். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் தவறு என்று சொல்கிறீர்களா?. காவிரி விவகாரத்தில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி பெற முடியும் என்று நினைத்தால் அதை செய்யலாம். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்’’ என்றார்.

* விஜய்க்கு புதிய அறை ஏன்? ‘சிக்கலில் மாட்டி விடாதீங்கப்பா…’
முதல்வர் விஜய் அலுவலக அறை மாற்றம் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘அரசு எடுக்கும் முடிவிற்கு அரசே பதில் சொல்லும். கேள்வி கேட்டு என்னை போன்றோர்களை சிக்கல்களில் விட்டு கஷ்டப்படுத்தாதீர்கள்’’ என கை கூப்பிக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, நீட் தேர்வு ரத்து செய்யவேண்டும் என மாணவர்கள் போராடிக்கொண்டிருந்த நிலையில் அமைச்சர்கள் ஜனநாயகன் படம் பார்த்தது குறித்த நிருபர்களின் கேள்விக்கு, பதிலளித்த செங்கோட்டையன், ‘கேமராவை ஆப் செய்யுங்கள். ஆப் தி கேமராவில் பதில் சொல்கிறேன்’ என்றார்.

* ‘சீட்டே தரல, எதுக்கு வேட்டி’அதிமுக மாஜி எம்எல்ஏவை கலாய்த்த செங்கோட்டையன்
ஈரோட்டில் மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையனுக்கு தொழில் வணிக சங்கத்தின் உறுப்பினரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது, தென்னரசு அணிந்திருந்த அதிமுக கரை வேட்டியை பார்த்த அமைச்சர் செங்கோட்டையன், தனது கையை தலையில் அடித்துக்கொண்டு, ‘‘தேர்தலில் போட்டியிட உனக்கு சீட்டே கொடுக்கல, எதுக்கு வேட்டி’’ என கேட்டு கலாய்த்தார். இதனை கேட்ட தென்னரசு மற்றும் அனைவரும் சிரித்தபடியே சென்றனர்.

Related Stories: