சென்னை: 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன.
சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025-26ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவான விளக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளின் பதற்றம், மன அழுத்தம், சுயமரியாதை குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பது தான் காரணம் என்றும், 16 முதல் 24 வயது பிரிவினர் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இவற்றை தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்;
ஆன்லைன் வகுப்பு கூட குழந்தைகளுக்குக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்க சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பது தான் தீர்வாகும்.
குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
