தவெக அரசு மூன்று மாதத்தில் வாங்கிய கடன் ரூ.20,281 கோடி; மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது: அதிமுக மாஜி அமைச்சர் எச்சரிக்கை

மதுரை: கடந்த 3 மாதங்களில் மட்டுமே தவெக அரசு ரூ.20,281 கோடி கடன் வாங்கியுள்ளது. மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: கவர்ச்சிகர வசனங்கள், கதைகள் மூலம் தேர்தல்களில் தற்காலிக வெற்றி பெறலாம். இன்றைக்கு காவிரி, மேகதாது துவங்கி லாக்கப் டெத் வரை முக்கிய பிரச்னைகளில் விஜய் வகிக்கும் மவுனத்தால், அவரது கொள்கை ஆழம் குறித்து மக்களுக்கு இயல்பாகவே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தவெக கட்சி தொடக்கத்தில் பிரசாரம் செய்ததற்கும், களத்திலே நடந்து கொள்வதற்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசியலில் பொய், வசீகரம், கவர்ச்சி ஒரு தேர்தலில் வேண்டுமானால் வெற்றி தரக்கூடும். அரசியல் அறம் மட்டுமே காலத்தை கடந்து ஒரு கட்சியை உயிர் போல வைத்திருக்கும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 3 மாதங்களில் மட்டுமே ரூ.20,281 கோடி தவெக அரசு கடன் வாங்கி இருக்கிறது.

இந்த முழு ஆண்டிலே இன்னும் ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் வரி வருவாய் வந்தாலும், தமிழக அரசின் கடன் வாங்குகிற இந்த நிலை எங்கு போகுமோ? நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது‌. நிர்வாக நடப்புக்கே கடன் வாங்கும்போது, நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் உயிர் பெறுமா, உயிரற்று போகுமா? இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: