ரோப்கார் இல்லாததால் வின்ச்க்கு நீண்ட நேரம் காத்திருப்பு பழநியில் பக்தர்கள் தவிப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். வார விடுமுறை தினமான நேற்று பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது. பராமரிப்பு பணி காரணமாக தற்போது ரோப்கார் இயக்கப்படவில்லை. இதனால் வின்ச் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோயிலுக்குச் சென்றனர்.

அதிகக் கூட்டம் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அன்னதானத்திற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவருந்தினர். அதிகளவு பக்தர்கள் வருகையால் கிழக்கு மற்றும் மேற்கு கிரிவீதிகளில் சுற்றுலா வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிந்தன. இதனால், பழநி புறநகர் பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: