சென்னை: 27வது கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டத்தையொட்டி, கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த வீரர்களின் துணிச்சல், மன உறுதி மற்றும் உயரிய தியாகம் ஆகியவற்றைப் போற்றும் வகையில், நேற்று சென்னை வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை மற்றும் தொடர்ந்து ‘லாஸ்ட் போஸ்ட்’ இசை நிகழ்வு இடம்பெற்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதி அதிகாரி கமோடோர் சுவர்வதன் மாகோன், தாம்பரம் விமானப்படை நிலைய அதிகாரி ஏர் கமோடோர் தபன் சர்மா, கடலோரக் காவல் படை (கிழக்கு) மண்டல தளபதி முருகன், முன்னாள் ராணுவத்தினர், ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் என்சிசி மாணவர்கள் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பள்ளி மாணவர்கள், என்சிசி மாணவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தேச பக்தியை ஊக்குவிக்கும் வகையிலும், தென்னிந்திய பகுதிக்கான தளபதி மோட்டார் சைக்கிள் பேரணியையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் ‘ராயல் என்பீல்ட் கிளப்ஹவுஸ்’ மற்றும் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
