பொறியியல் மாணவர் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வில் 28,550 பேருக்கு ஒதுக்கீடு

சென்னை: இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 13ம் தேதியும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 15ம் தேதியும் நடைபெற்றன. இந்த கலந்தாய்வின் மூலமாக 950 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 20ம் தேதி தொடங்கியது.

இதில், 200 முதல் 171 கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் தகுதியுள்ள தொழிற்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டனர். முதல் சுற்று கலந்தாய்வில் தற்காலிகமாக 32,514 பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதை அவர்கள் உறுதிசெய்ய சனிக்கிழமை மாலை 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 28,550 பேர் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்தனர். இந்நிலையில், அந்த 28,550 பேருக்கும் நேற்று காலை 10 மணி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது.

இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 30ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்கு சென்று சேர்க்கை பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்குகிறது. கட் ஆப் மதிப்பெண் 171 முதல் 135.75 வரை உள்ள மாணவர்கள் இதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: