சென்னை: பல்வேறு சுங்கச்சாவடிகளில் இரண்டாவது முறையாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், சென்னையில் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ரூ.5 முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தமாக 80 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், 66 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப் 1ம் தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப் 1ம் தேதியும் மாற்றம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்ரல் மாத கட்டண உயர்வு மே 23 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், பல்வேறு சுங்கச்சாவடிகளில் மே மாதத்திற்கு பின் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சுங்கக்கட்டணம் அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது. குறிப்பாக வாகனங்களுக்கு ஏற்ப 5 ரூபாய் முதல், அதிகபட்சமாக 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
அந்த வகையில், சென்னையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளான வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இந்தச் சுங்கச்சாவடிகளைத் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 மாதங்களில் 2வது முறையாக இவ்வாறு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வானகரம் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.55, 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணம் ரூ.85, 50 பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1,860, சுங்கச் சாவடி மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒற்றைப் பயணத்திற்கான கட்டணம் ரூ.30; இலகுரக வணிக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.90, 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணம் ரூ.135, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.3005, சுங்கச் சாவடி மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒற்றைப் பயணத்திற்கான கட்டணம் ரூ.45 என்ற அளவிலும்;
பேருந்து மற்றும் லாரிகள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.190, 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணம் ரூ.285, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.6,290, சுங்கச் சாவடி மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒற்றைப் பயணத்திற்கான கட்டணம் ரூ.95 என்ற அளவிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.75, 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணம் ரூ.115, 50 பயணங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.2,580, சுங்கச் சாவடி மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒற்றைப் பயணத்திற்கான கட்டணம் ரூ.40;
இலகுரக வணிக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.125, 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணம் ரூ.190, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.4170, சுங்கச் சாவடி மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒற்றைப் பயணத்திற்கான கட்டணம் ரூ.65 என்ற அளவிலும்; பேருந்து மற்றும் லாரிகள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.260, 24 மணி நேரத்திற்குள் திரும்பும் பயணம் ரூ.395, மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.8,735, சுங்கச் சாவடி மாவட்டத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒற்றைப் பயணத்திற்கான கட்டணம் ரூ.130 என்ற அளவிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இரண்டு சுங்கச் சாவடிகளிலும் மூன்று அச்சு வரை உள்ள வணிக வாகனங்கள், 4 முதல் 6 அச்சு வரை உள்ள கனரக வாகனங்கள், 7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சு கொண்ட பிரம்மாண்ட வாகனங்கள் ஆகியவற்றுக்கும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணமும் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, இதற்கு முன் நடைமுறையில் இருந்த ரூ.350 என்ற தொகையில் இருந்து தற்போது ரூ.360 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கடந்த ஆண்டு மொத்த விலை குறியீடுக் கட்டணத்தைக் குறைத்தது. இது தொடர்பான வழக்கில், நீதிமன்றம் முந்தைய விலை குறியீடுக் கட்டணத்தை மீண்டும் பயன்படுத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பழைய கணக்கீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தியது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட, ஒரு முறை கட்டணக் குறைப்பு ரத்து செய்யப்பட்டு, பல தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மே மாதத்திற்கு பின், இது இரண்டாவது கட்டண உயர்வு. இதனால், வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அனைத்து சுங்கச்சாவடிகளிலும் படிப்படியாக அமலுக்கு வரும்.
அதுபோல், சுங்கச்சாவடியில் இருந்து, 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் தனியார் வாகன உரிமையாளர்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.350 இருந்து ரூ.360ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். ஏற்கனவே அமெரிக்கா ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
அதன் தாக்கத்தால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சுங்கச்சாவடிக் கட்டண உயர்வால் மேலும் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, விலை உயர்வால் மக்கள் சிரமப்படும் வேளையில், பல்வேறு சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது நடுத்தர குடும்பங்களைப் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கும் சூழல் ஏற்படுத்துள்ளது.
