சென்னை: நீட் போராட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கொச்சியிலிருந்து விமானத்தில் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் உள்ள மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிய அரசுக்கு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வு தொடர்பான குளறுபடிகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்களுக்கு எதிராக காவல் துறையைக் கொண்டு தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?
மாணவிகள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்? இந்த சம்பவங்களுக்கு யார் பொறுப்பு? இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்காமல் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் செயல்பட அனுமதிக்க மாட்டோம். நீட் முறைகேடுகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 1ம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகிறார். மாமல்லபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று உரை நிகழ்த்த இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
