மதுரை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாகியுள்ளது. நாம் நினைத்தது போல அறிவிக்கப்படாத அரசு விடுமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகமே திருவிழா கோலமாக இருக்கணும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவால் விஜய் ரசிகர்கள் தமிழகத்தை அலங்கோலப்படுத்தி விட்டார்கள். வார நாட்களில் தவறாமல் கோட்டைக்கு வரும் முதலமைச்சர் விஜய், நேற்று (நேற்று முன்தினம்) கோட்டைக்கு வரவில்லை.
மன்னன் எவ்வழியோ மக்களும் அப்படியே என்று அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் மக்கள் பணியை தள்ளி வைத்துவிட்டு முதல்வர் விஜய் நடித்து வெளிவந்த ஜனநாயகன் படம் ரிலீசுக்கு ரீல்ஸ் போட தியேட்டருக்கு போய் விட்டார்கள், நம்முடைய ஜனநாயக காவலர்கள். அதோடு மட்டுமா அங்கே தியேட்டரில் குற்றால அருவியிலே தண்ணீர் கொட்டியது போல தமிழக அமைச்சர்களின் கண்களிலே கண்ணீர் கொட்டிய அந்த காட்சி நம் நெஞ்சத்தை துடிதுடிக்க வைத்து விட்டது. இந்த ஆண்டு காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லை.
அதனால் வந்த கண்ணீரா? கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கிறது. அதனால் வந்த கண்ணீரா? சாமானிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்களே மாணவர்கள். அதனால் வந்த கண்ணீரா? கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை எப்படி தடுப்பது என்பதனால் வந்த கண்ணீரா? அரசு மருத்துவமனையில் நோயாளியின் ஒரு விரலையே எலி கடித்துக் கொண்டு போனது அதனால் வந்த கண்ணீரா? அருணாச்சலம் என்கிற ஒரு இளைஞன் லாக்கப் டெத் மரணம் தமிழகத்தை உலுக்கியதே…
அதோடு தினந்தோறும் அரங்கேறி வரும் லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை. அதனால் அந்த கண்ணீரா? பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்கிற ஏக்கத்தில் வந்த கண்ணீரா? போதை நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை என்கிற கடமை உணர்வால் வந்த கண்ணீரா?
இத்தனையும் பார்த்துவிட்டு கண்ணீர் வராத அமைச்சர்களுக்கு ஜனநாயகன் பார்க்கிறபோது வந்த கண்ணீர் இருக்கிறதே குற்றால அருவியே அதில் போட்டி போட முடியவில்லை. சினிமா கதாநாயகனை உண்மை கதாநாயகனாக நினைத்து இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த ஜென்சி தலைமுறை விழுந்து கிடக்குமோ என்பது நமக்கு புரியவில்லை. இவ்வாறு பேசியுள்ளார்.
