விருதுநகர்: முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வம், இங்குள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சிறப்பு காட்சியை காண வந்தார். திரைப்பட இடைவேளையின்போது, எம்எல்ஏ செல்வம் தரப்பில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.
அந்த வீடியோவில், கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ‘‘விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தோல்வி’’ என்ற செய்தியை ரெக்கார்ட் செய்து ஒளிபரப்பினர். மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது எம்எல்ஏ செல்வம் வாக்கு சேகரித்த காட்சிகளும், வெற்றிக்கு பிறகு அவர் கலந்து கொண்ட நிகழ்வுகள் குறித்த காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதையறிந்த தேமுதிகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எம்எல்ஏ செல்வத்தை கண்டித்து தேமுதிகவினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கை நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து திரையரங்கை முற்றுகையிட்ட 6 பெண்கள் உட்பட 83 பேரை போலீசார் கைது செய்தனர். எம்எல்ஏ செல்வம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என தேமுதிகவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தவெக எம்எல்ஏ செல்வன் நேற்றிரவு வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தக் காணொளியால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால், அதற்காக மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
