மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழநி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேணுகோபாலு சேனாபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஜஸ்டின் மணிகண்டன் மீது, ஏற்கனவே போலி ஆவணப்பதிவுகள் தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பழநியில் உள்ள பிற தகுதியான அதிகாரிகளைப் புறந்தள்ளிவிட்டு, குறிப்பிட்ட இந்த நிலப்பதிவிற்காக மட்டுமே பொறுப்பு அதிகாரியாக ஜஸ்டின் மணிகண்டனை நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த அதிகாரியைப் பணி அமர்த்திய மாவட்டப் பதிவாளர் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே துறை சார்ந்த அமைச்சர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது விசாரணையின் நேர்மையை பாதிக்கும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சிபிசிஐடி அமைப்பால் அரசு நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் முழு உண்மையையும் வெளிக் கொண்டு வரமுடியாது. இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெறும் வகையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி அமைப்பிடமிருந்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து விசாரணையை கண்காணிக்குமாறும், விசாரணையின் நிலை குறித்து விபரத்தை அவ்வப்போது நீதிபதியிடம் தெரிவிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆஜராகி, ‘‘இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என முறையிட்டார். அப்போது நீதிபதிகள், ‘‘தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதும் விசாரணைக்கு வரும்’’ என்றனர். இந்த மனு வரும் 28ம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
