எடப்பாடி தலைமையில் நடந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்த சி.வி.சண்முகம்

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புறக்கணித்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டங்களில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டமன்ற மற்றும் மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன்? என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் அவர் விளக்கங்களை கேட்டு அதற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மயிலம் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவருமான சி.வி.சண்முகம் கலந்து கொள்ளவில்லை.

சி.வி.சண்முகம் தேர்தலுக்கு பிறகு எஸ்.பி.வேலுமணியுடன் இணைந்து தனி அணியாக செயல்பட முயற்சி செய்தார். ஆனால், அவரது முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனாலும், அதிமுக தலைமைக்கு எதிராகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சி.வி.சண்முகத்தின் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பறித்தார். மேலும், இவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.

தற்போது விழுப்புரம் மாவட்ட செயலாளராக பசுபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1,160 பேர் கடந்த 21ம் தேதி அதிமுக கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்எல்ஏ கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.

அதேநேரம், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று அதிகம் பேர் பங்கேற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் திரளாக கூடி வரவேற்பு அளித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பங்கேற்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இன்று, தென்சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: