பொறியியல் கலந்தாய்வு 35,214 பேருக்கு இடஒதுக்கீட்டு ஆணை

சென்னை: பொறியியல் படிப்பில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த கலந்தாய்வின் மூலம் 950 பேருக்கு இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 200-171 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீட்டில் தகுதியுள்ள அனைத்து தொழிற்கல்வி மாணவர்களுக்கும் ஒரே சுற்றில் கலந்தாய்வு நடந்தது.

அதன்படி, முதல் சுற்றில் தற்காலிகமாக 35,214 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது. கல்விப்பிரிவில் 37,976 தகுதியான மாணவர்களில் 32,250 பேர் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 31,221 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 2,570 தகுதியான மாணவர்களில் 2,434 பேர் விருப்பங்களை பதிவு செய்த நிலையில், 2,427 பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தொழிற்கல்வி பிரிவில் 2,205 தகுதியான மாணவர்களில் 1,493 பேர் விருப்பங்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் 1,318 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. தொழிற்கல்வி பிரிவின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 524 தகுதியான மாணவர்களில் 310 பேர் விருப்பங்களை பதிவு செய்த நிலையில், 248 பேருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டாயம் தங்கள் இடங்களை உறுதிசெய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களது இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என பொறியியல் மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளது.

Related Stories: