பூந்தமல்லியில் சாலையின் எதிர் திசையில் கல்லூரி மாணவன் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதி 5 பேர் காயம்: பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி

 

பூந்தமல்லி: பூந்தமல்லியில் சாலையின் எதிர் திசையில் கல்லூரி மாணவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். சென்னை, ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அட்சயன் (19), கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு வாகனங்களின் மீது கார் மோதியது‌. இதில் அந்த வாகனங்களில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் கீழே விழுந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த காரை மடக்க முயன்ற போது பயந்து போன அந்த மாணவன் காரை திருப்பி சாலையின் எதிர் திசையில் வேகமாக ஓட்டி சென்றார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதி இடித்து தள்ளிவிட்டு வேகமாக சென்றுள்ளார். மேலும் இருசக்கர வாகனங்களை இடித்து தரையோடு தேய்த்தபடி சிறிது தூரம் இழுத்துச் சென்றதில் அதில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விரட்டி சென்று அந்த காரை மடக்கி பிடித்து காரை ஓட்டி வந்த நபரை வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர், வாகன ஓட்டிகள் தாக்கியதில் ரத்தம் சொட்ட, சொட்ட அந்த மாணவன் அலறித் துடித்தார்‌. இதுகுறித்து தகவல் அறிந்து காரை ஓட்டி வந்தவரின் தந்தை அங்கு வந்து தனது மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் பொதுமக்கள் அந்த நபரின் தந்தையையும் சேர்த்து சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார்கள். இதில் தந்தை, மகன் இருவரும் காயமடைந்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து காயம் அடைந்த கல்லூரி மாணவன் அட்சயனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Stories: