கார் மீது வேன் மோதியதில் பெண்கள் உள்பட 4பேர் படுகாயம்

*வேன் டிரைவர் கைது

தென்காசி : குற்றாலம் பழைய குற்றாலம் சாலையில் கார் மீது வேன் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.‌ வேன் டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வின்சென்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை மகன் திருப்பதி (53).

இவர் தனது காரில் பெங்களூரைச் சேர்ந்த கோபிநாத் (51), அவரது மனைவி பரிமளா தேவி (48), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (62), அவரது மனைவி மாரியம்மாள் (54) ஆகியோருடன் தனது காரில் சீசனை முன்னிட்டு குற்றாலத்திற்கு குளிப்பதற்காக சென்றார். பழைய குற்றாலம் சாலையில் இருந்து மெயின் அருவிக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கரூர் பில்டிங் அருகே வந்தபோது தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சண்முகராஜ் (24) என்பவர் தனது வேனில் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களுடன் குற்றாலத்திற்கு வந்து குளித்துவிட்டு பழைய குற்றாலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேன் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்வதற்கு முயன்றபோது எதிரே திருப்பதி ஓட்டி வந்த காரின் மீது மோதி அருகில் இருந்த சிறிய ஓடையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த கோபிநாத், பரிமளா தேவி, ராஜேந்திரன், மாரியம்மாள் ஆகிய நான்கு பேரும் காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் வேனை ஓட்டி வந்த சண்முகராஜ் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: