*நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
ஆம்பூர் : ஆம்பூர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு துணைதலைவர் எம்.ஆர்.ஆறுமுகம், ஆணையாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து டெண்டர் விட கோரி முன்னாள் நகராட்சி தலைவரும், கவுன்சிலருமான நஜீர் அஹ்மத் பேசினார். தொடர்ந்து உரிய பதில் தராமல் ஆணையாளர் முத்துசாமி அங்கிருந்து வெளியேற முயன்றதாக தெரிகிறது.
அப்போது கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு தங்களுக்கு உரிய பதிலை தெரிவிக்கவேண்டும் என கோரினர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நகராட்சிதலைவர், துணைதலைவர் ஆகியோர் கவுன்சிலர்களை சமாதானப்படுத்திய நிலையில் கூட்டம் தொடர்ந்தது. இதில் நடந்த விவாதம் வருமாறு:
கவுன்சிலர் ரமேஷ் : ஆம்பூர் பூக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சாலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. சாலையில் சுமார் 15 அடி வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல இயலாத நிலை உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற வேண்டும்.
(இதேகோரிக்கையை மற்ற கவுன்சிலர்களும் முன்வைத்து பேசினர்)ஆணையாளர் : நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கவுன்சிலர் இம்தியாஸ் அஹ்மத் : வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில் அதற்கான கேட்டை அமைத்து தர வேண்டும்.
பொறியாளர்: நடவடிக்கை எடுக்கப்படும்.கவுன்சிலர் கமால்பாஷா : மோட்டுகொல்லை செல்லும் ஜலால் ரோட்டில் தனியார் பள்ளி அருகே பல்வேறு வார்டுகளில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது.
ஆணையாளர் : அகற்ற நடவடிக்கை எடுக்கபடும்.
கவுன்சிலர் வசந்த் : ஜெ.ஜெ. நகரில் சாலை அமைத்து தரவேண்டும்.
நகராட்சிதலைவர் : நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதாக நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆடு, மாடு அறுப்பதை தவிர்த்து உரிய நகராட்சி இறைச்சி கூடத்தில் அறுக்கவும், வரி வசூலில் ஈடுபடும் நகராட்சி வருவாய் பிரிவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்தும், லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
