*யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
கிருஷ்ணகிரி : தேன்கனிக்கோட்டை அருகே, மலை கிராம அரசு பள்ளிக்குச் சுற்றுச்சுவர் இல்லாததால், யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதனால் பீதியடைந்துள்ள பொதுமக்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டமுகிலாளம் மலைக்கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளது.
பள்ளிக்கு சுற்றுச்சுவரும் இல்லாமல் திறந்தவெளியில் உள்ளது. இதனால், வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள், எந்நேரமும் ஒருவித அச்ச உணர்வுடனேயே கல்வி பயிலும் நிலை உள்ளது.
அதேபோல், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் ஏதுவாக இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக, பள்ளி வளாகத்தில் புதிய சத்துணவு சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், சமையலர் நியமிக்கப்படாததால், சமையலறை பல நாட்களாக பூட்டியே கிடக்கிறது.
இதனால், இப்பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு, அங்கிருந்து இப்பள்ளி ஆசிரியர்கள் தினந்தோறும் தங்களது இருசக்கர வாகனங்களில் சென்று, கொண்டு வருகின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில், உணவை இப்படி பைக்குகளில் கொண்டு வருவது ஆசிரியர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, மலைக்கிராம மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடியாக பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும், புதிய சமையலரை நியமிக்க வேண்டும். விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `எங்கள் கிராமம் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. இங்கு யானைகள், சிறுத்தைகள் வாழும் வனமாக உள்ளது. கிராமத்திற்குள் அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்கின்றது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை.
இதனால் வனவிலங்குகள் பள்ளி அருகே வந்து விடுமோ என்கிற அச்சமாக உள்ளது. மேலும், விளையாட்டு மைதானம் இல்லாததால், இதுவரை எங்கள் கிராமத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு உடற்கல்வி என்பதே தெரியாது.
பள்ளிக்கு சமையலர் இல்லாததால், ஆசிரியர்கள் வேறு இடத்தில் சமைக்கும் உணவை, தினமும் டூவீலரில் கொண்டு வருகின்றனர். இதனால் மாணவ, மாணவிகளுக்கு சரியான நேரத்திற்கு உணவு வராமல் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, மலை கிராம குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பை கருதி, உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்,’ என்றனர்.
