திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்து காயமடைந்த மூதாட்டி தமிழ்க்கொடி ஐ.சி.யுவில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சாதாரண வார்டு, ஐ.சி.யு. என எல்லா இடங்களிலும் எலிகள் சுற்றி திரிவதால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்க்கொடி என்கிற மூதாட்டி, கடந்த சில நாட்களாகத் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று 5-வது மாடியில் உள்ள பொது வார்டில் அவர் சிகிச்சை பெற்று வந்தபோது, எலி அவரது கால் விரலைக் கடித்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவிலும் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, மருத்துவமனை வளாகத்தின் முன்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி மட்டுமன்றி பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில், இங்கு இது போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
மருத்துவமனை வார்டுகள், வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்துதல், கழிவுநீரை அகற்றுதல், கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மருத்துவமனை நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சுகாதாரமற்ற சூழலை முற்றிலுமாகத் தவிர்த்து, தூய்மையான மருத்துவமனையாக இதனைச் செயல்படுத்த வேண்டும்.
