அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கு விபத்து கொள்ளிடம் பழைய பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புவனகிரி : அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுவதால் கொள்ளிடம் பழைய பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் வல்லம்படுகை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் பழைய பாலம் உள்ளது. இந்தப் பாலம் நாகை மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாக முக்கிய சாலையில் அமைந்துள்ளது.

இந்த ஆற்று பாலம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இப்பாலம் வழியாக சென்று வருகின்றன. மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, சீர்காழி உள்ளிட்ட பகுதியில் இருந்து சிதம்பரம், புதுச்சேரி, சென்னை உட்பட பல ஊர்களுக்கு பேருந்துகள் அதிக அளவில் சென்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் -நாகை இடையே புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று, இதே கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டு புதிய பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

ஆனால் சிதம்பரத்திலிருந்து கொள்ளிடம், சீர்காழி, மாயவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் இந்த பழைய ஆற்று பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றன. அதேபோல் டிராக்டர், டெம்போ, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் இந்த வழியாக கிராம பகுதிகளுக்கு செல்கிறது.

தற்போது பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. பாலத்தின் நடுவே பெரிய விரிசல்கள் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. அதேபோல் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. குறிப்பாக பாலத்தின் தடுப்பு கட்டைகள் உடைந்த நிலையில் உள்ளதை துணியால் இழுத்து கட்டி வைத்துள்ளனர்.

மேலும் தடுப்பு சுவரில் நீண்ட நெடுந்தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது.இதனால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கீழே விழும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, உடனடியாக இந்த பழைய கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை சீரமைத்துக்கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Related Stories: