புதுடெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமரின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: அனைத்துச் சீர்திருத்தங்களிலும் மக்களின் நலனுக்கு முக்கிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும் சீர்திருத்தங்கள், உண்மையான உத்வேகத்துடன், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அரசின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதும் சீர்திருத்தங்களின் நோக்கம் ஆகும்.
நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஒட்டுமொத்த அரசையும் உள்ளடக்கிய அணுகுமுறை தேவை. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவு ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும், இந்தியாவின் இளைஞர்களே இக்கோட்பாட்டின் அடித்தளமாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
