புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்பட ஒன்றிய அரசின் போட்டித்தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி வருவது குறித்தும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம், டெல்லியில் மாணவர்கள் மீதான தடியடி குறித்தும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது: உலகிலேயே மிகச் சிறந்த கல்வி அமைப்புகளில் ஒன்றாக அறியப்பட்ட நமது கல்வி அமைப்பு, இன்று முறைகேடுகள் நிறைந்த அமைப்பாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. ஆனால், ஒருவருக்கு கூட தண்டனை வழங்கப்படவில்லை.
வினாத்தாள் கசிவால் ஏழரை கோடி மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது மாணவர்களுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதுதான் கேள்வி. பாதுகாப்புப் படைகள் தங்கள் ஆயுதங்களை அவர்கள் மீது குறிவைப்பதற்கும், அவர்கள் தாக்கப்படுவதற்கும், அடித்துத் துன்புறுத்தப்படுவதற்கும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்கள் அமைதியான முறையில் போராடுகிறார்கள்.
இந்தக் கல்வி அமைப்பு முறைகேடானது என்பது மட்டுமல்ல, இது சாதாரண மக்களால் தாங்க முடியாத அளவுக்கு அதிக செலவு பிடிப்பதாகவும் உள்ளது. இது ஒவ்வொரு இளைஞருக்கும் தெரிந்த ஒரு புள்ளிவிவரம், ஆனால், இந்திய அரசுக்கு மட்டும் இது தெரியவில்லை. நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் குடும்பங்கள் செலவிடும் மொத்தத் தொகையானது, அரசின் ஆண்டு கல்வி பட்ஜெட்டுக்கு சமமாக உள்ளது. இந்திய அரசின் கல்வி பட்ஜெட்டின் மதிப்பு ரூ. 1.4 லட்சம் கோடியாகும். அதே வேளையில், நீட் தேர்வு எழுதும் குடும்பங்கள் ஆண்டுதோறும் ரூ.1.32 லட்சம் கோடி யைச் செலவிடுகின்றன. இவ்வாறு ராகுல் கூறினார்.
* தர்மேந்திரபிரதான் ஊழல்வாதி
ராகுல்காந்தி கூறுகையில், ‘தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கோருகின்றனர். இது ஒரு நியாயமான கோரிக்கை. பிரதான் ஒரு ஊழல்வாதி மற்றும் திறமையற்ற நபர். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். தர்மேந்திர பிரதான் இந்த ஒட்டுமொத்த குளறுபடியின் அடையாளம், அவர் நீக்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாகத் திகழ்ந்த கல்வி அமைப்பை அவர் அழித்துவிட்டார். டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காகப் பிரதமர் அவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்’ என்றார்.
* அரசாங்கத்தை அகற்றுங்கள் என்று போலீசார் என் காதில் கூறினர்
ராகுல் காந்தி கூறுகையில்,’ இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போது எனக்குக் காவல்துறையினரிடமிருந்து ஒரு எதிர்பாராத செய்தி கிடைத்தது. அவர்கள் இந்த அரசாங்கத்தை அகற்றுங்கள் என்று என்னை கைது செய்தபோது எனது காதில் கிசுகிசுத்தனர்’ என்றார்.
* மக்களுக்காக இன்னும் பல அடிகளை வாங்கத்தயார்
ராகுல்காந்தி கூறுகையில்,’ அடிவாங்குவது எனக்குப் பழகிப்போன ஒன்றுதான்; அது ஒரு பிரச்சினையல்ல. இந்திய மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்துவதே எனது பணி – அது மாணவர்களாகவோ, விவசாயிகளாகவோ அல்லது இளைஞர்களாகவோ இருக்கலாம்; எதிர்க்கட்சித் தலைவராக நான் செய்ய வேண்டிய பணி அதுதான்.
இவை மிகச் சிறிய விலைகள் (தியாகங்கள்) தான், பெரிய இழப்புகள் அல்ல. ஒன்று-இரண்டு அடிகள் விழுவது ஒரு பிரச்சினையே இல்லை; இன்னும் பல அடிகளை வாங்கவும் நான் மகிழ்ச்சியுடன் தயாராக இருக்கிறேன். என்னிடம் எப்படி நடந்துகொண்டார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல; அதைப் பற்றிக் கவலையில்லை.
மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, கல்வி முறை, வினாத்தாள் கசிவு மற்றும் இதனால் அந்தச் சிறுவர்கள் கொடுத்த விலை ஆகியவற்றின் மீதே கவனம் இருக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஐந்து முறையோ, பத்து முறையோ எனக்குக் கவலையில்லை. சொல்லப்போனால், அதை நான் விரும்புகிறேன். ஏனெனில் அதிலிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்’ என்றார்.
