*பறிமுதல் செய்ய முயன்ற லாரியின் முன்பாக படுத்து மறியல்
களக்காடு : களக்காடு அருகே விளைநிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதித்த வனத்துறையினர் லாரியையும் பறிமுதல் செய்ய முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்ததோடு லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கீழ வடகரையைச் சேர்ந்த பெருமாளின் மகன் பாலன் (48). நெல்லை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளரான இவர், ஊருக்கு அருகே பூலாங்குளம் பத்துக்காட்டில் திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இதில் வாழை, நெல் பயிரிட்டுள்ள அவர், அதே விளைநிலத்தில் விவசாய தேவைகளுக்காக இயந்திரங்கள் மூலம் ஆழ்துளை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதையறிந்து விரைந்துவந்த களக்காடு வனத்துறையினர், இவ்வாறு விளைநிலத்தில் புதிதாக போர் போடக்கூடாது என தடுத்தனர். மேலும் அப்பகுதி தனியார் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நெல்லை கலெக்டரிடம் அனுமதி பெற்றபிறகே எந்தவொரு பணிகளையும் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக தடை விதித்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் அணி திரண்டதோடு வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வனத்துறையினர் போர் போடும் இயந்திரங்களை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர் இதன்காரணமாக மேலும் அதிர்ச்சியடைந்த பாலன் உள்ளிட்ட விவசாயிகள், இயந்திரங்கள் பொருத்தப்பட்ட லாரி முன்பாக தரையில் படுத்து மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் வனத்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து விரைந்துவந்த களக்காடு இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், வனத்துறை சட்டத்தின் படி கலெக்டர் அனுமதி பெற்ற பிறகே புதிதாக ஆழ்துளை அமைக்க முடியும். எனவே இதுகுறித்து கலெக்டரை அணுகி அனுமதி பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் நீண்டநேரத்திற்கு பிறது இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதேபோல் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.
பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாலன் கூறுகையில் ‘‘4 தலைமுறையாக இந்நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது மழை இல்லாததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச குளங்களில் தண்ணீர் இல்லை. வாடும் பயிர்களை காப்பாற்றும் பொருட்டு புதிதாக ஆழ்துறை கிணறு அமைக்க முயற்சித்தபோது அதையும் தடுக்கின்றனர். அதிகாரிகள் கூறியவாறு கலெக்டரிடம் சென்று புதிதாக ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான அனுமதி வாங்கி வருவதற்குள் பயிர்கள் கருகி விடும்.
அதன்பிறகு போர் போட்டு என்ன பயன்?” என வேதனையுடன் கேள்வி எழுப்பினார். அண்மை காலமாக களக்காடு பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு ஜேசிபி போன்ற இயந்திரங்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர். இதற்கு விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்தை திட்டமிட்டு நசுக்குவதா?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் கூறுகையில் ‘‘‘விளைநிலத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என்பது புதிய சட்டமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் போர் போட்டாலோ, நிலத்தை சீர் செய்ய ஜேசிபி இயந்திரம் கொண்டு சென்றாலோ அனுமதி வாங்க வேண்டும் என்று வனத்துறையினர் தடுக்கின்றனர்.
மலையடிவாரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்திற்கு அப்பால் சென்று விவசாயம் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். அப்படியென்றால் கடலில் சென்றா விவசாயம் செய்ய முடியும்? வனத்துறையினர் தொடர்ந்து திட்டமிட்டு விவசாயத்தை நசுக்கி வருகின்றனர். இதற்கு அரசு துணை போகக் கூடாது. புலிகள் காப்பகம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இந்நிலை நீடித்தால் விவசாயம் அழிந்து விடும், விவசாயிகள் தற்கொலை தான் செய்ய வேண்டும்” என்றார்.
வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலாளர் முருகன் கூறுகையில் ‘‘விளைநிலங்களுக்கு ஜே.சி.பி கொண்டு செல்லக்கூடாது, போர் போடக் கூடாது என்று வனத்துறை தடை விதிப்பது விவசாயிகள் மீது அதிகாரிகள் தொடுக்கும் மறைமுக போர் ஆகும்.
ஒருபுறம் வனவிலங்குகள் விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகிறது. மறுபுறம் வனத்துறையினரும் விவசாயிகளை வஞ்சித்து வருகின்றனர். அரசும், உயர் அதிகாரிகளும் இதனை வேடிக்கை பார்ப்பது தான் வேதனையின் உச்சம் ஆகும்” என்றார்.
