ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பயிருக்கு ஊடுபயிராக மக்காசோளத்தை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, அறச்சலூர், சித்தோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 10 மாத பயிரான மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு ஏக்கர் மஞ்சள் பயிரிட விதை மஞ்சளுக்கு ரூ.30 ஆயிரம், குப்பை உரம் மற்றும் உழவு கூலி ரூ.40 ஆயிரம், மஞ்சள் வெட்டுக் கூலி ரூ.30ஆயிரம், மஞ்சளைப் ”பாலிஸ்” செய்ய ரூ.20 ஆயிரம் என ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவாகிறது.
இருப்பினும், சராசரியாக 2 முதல் 21 டன் வரை மஞ்சள் விளைச்சல் கொடுக்கிறது. இந்நிலையில், நசியனூர் அருகேயுள்ள கிராம புறங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் மஞ்சள் சாகுபடி நடைபெற்று வருகிறது. மஞ்சள் சாகுபடியில், உள்ள வருவாய் இழப்பை சரி செய்ய ஊடுபயிராக மக்காசோளம் பயிரிடப்படுகிறது.
இரண்டரை மாதம் பயிரான மக்காசோளம், ஏக்கருக்கு 2 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது மார்க்கெட் கமிட்டிகளில் ஒரு மூட்டை மக்காசோளம் சராசரியாக தற்போது ரூ.2,260 விலை போகிறது. இதனால் மஞ்சள் ஊடுபயிராக மக்காசோளத்தை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
