*வாகன ஓட்டிகள் அச்சம்
புளியங்குடி : புளியங்குடி அருகே நிட்சேப நதி குறுக்கே அமைந்துள்ள குறுகிய பாலத்தால் எதிரெதிரே வாகனங்கள் வந்தால் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுகிய ஆற்றுப்பாலத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடி அருகே சுப்ரமணியாபுரம் அருகே அமைந்துள்ள நீட்சேப ஆற்றுப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இச்சாலை வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
எனினும், அந்தப்பாலம் தற்போதைய போக்குவரத்து தேவைக்கு ஏற்ப மேம்படுத்தப்படாததால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த பாலத்தின் அகலம் குறைவாக இருப்பதால், பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இப்பாலத்தின் இருபுறங்களிலும் போதுமான பாதுகாப்புத் தடுப்புகள் இல்லை. வாகனங்கள் எதிரெதிரே வந்தால் பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு வாகனம் சென்றால் மட்டுமே அதிரே வரும் வாகனம் செல்ல முடியும் என்ற நிலை இன்றளவும் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களிலும், மழைக்காலங்களிலும் பாலத்தில் போதிய இடவசதி இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறிய தவறு கூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் நிட்சேப நதி ஆற்றுப்பாலத்தை விரிவுபடுத்தி, பாதுகாப்பு தடுப்புச் சுவர்களை உயர்த்தி பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைமேடைகள் அமைத்து, ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் போதிய மின் விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
