*அமைதி பேச்சு வார்த்தையில் மாதர் சங்கம் குற்றச்சாட்டு
அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூரிலிருந்து புதுக்காடு செல்லும் வழியில் 3804 எண் கொண்ட ‘டாஸ்மாக்’ கடை இயங்குகிறது. இக்கடையில் மது அருந்தும் நபர்களால், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு மிகுந்த தொந்தரவு ஏற்படுவதாகவும், மாலை 6 மணிக்கு பிறகு, அவ்வழியில் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் புகார் எழுந்தது.
இதனடிப்படையில், அகில இந்திய மாதர் சங்கத்தினர் சார்பில், 3 கட்டங்களாக போராட்டம் நடத்தினர். இதில், கடந்த மாதம் 25ல் நடந்த போராட்டத்தின் போது, 25 நாட்களில் கடையை மூடுவதாக, டாஸ்மாக் உதவி மேலாளர் ரவிச்சந்திரன் உத்தரவாதம் அளித்திருந்தார்.
இதையடுத்து, மாதர் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், 25 நாட்களுக்குப் பின்னும் டாஸ்மாக் இயங்கி வந்ததால், நேற்று முற்றுகை போராட்டம் நடத்த மாதர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, நேற்று போராட்டம் நடத்த வந்த மாதர் சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருவாய்த்துறையினர் அழைத்தனர். அந்தியூர் தாசில்தார் சக்திவேல், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு ஆகியோர் முன்னிலையில், தாலுகா அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.அப்போது, போராட்டம் நடத்தும் போதெல்லாம், கால அவகாசம் கேட்கிறீர்கள்.
ஆனால், கடையை மூடும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என மாதர் சங்கத்தினர் கூறினர். மேலும், நாங்கள் போராட்டம் நடத்தும்போது, கடை சூபர்வைசர்களும், சேல்ஸ்மேன்களும், குடிமகன்கள் சிலருக்கு ‘குவார்ட்டர்’ கொடுத்து, போட்டி போராட்டம் நடத்துமாறு தூண்டிவிடுகின்றனர் என குற்றம் சுமத்தினர்.
இதன்முடிவில், இன்னும் 2 நாட்களில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தாசில்தார் சக்திவேல் உத்ரவாதம் அளித்தார். மேலும், 2 நாட்களில் மூடுவது சம்பந்தமாக, தாசில்தாரும், இன்ஸ்பெக்டரும் கடிதத்தில் கையெழுத்திட்டு மாதர் சங்கத்தினரிடம் கொடுத்தனர்.
