*இடவசதியிருந்தும் நெரிசலில் திணறும் வாகனங்கள்
*பராமரிப்பு பணியில் அலட்சியம்: பயணிகள் தவிப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
உலக புகழ்பெற்ற ஆன்மிக நகரம் திருவண்ணாமலை. ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்க அண்ணாமலையார் திருக்கோயில், பாரம்பரியம் மிக்க கிரிவல வழிபாடு போன்வற்றால், நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அதோடு, பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக, திருவண்ணாமலை நகரம் கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. எனவே, விழா காலங்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் நகராக மாறிவிட்டது. எனவே, திருவண்ணாமலை நகரின் எதிர்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, கடந்த திமுக ஆட்சியில் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ரூ.34 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது.
இந்த பஸ் நிலையம், கடந்த ஜனவரி முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும், புதிய பஸ் நிலையத்தில் இரண்டாம் கட்ட விரிவாக்கப்பணிகள் நிலுவையில் இருந்ததால், பழைய பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கான பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்கப்பணிகள் நிறைவு பெற்றதால், கடந்த 13ம் தேதி முதல் அனைத்து புறநகர் பேருந்துகளும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முழுமையாக இயக்கப்படுகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையத்தில் விசாலமான இடவசதியிருக்கிறது.
ஆனாலும், பஸ் நிலையத்தின் விரிவாக்கப்பகுதிகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. மேலும், பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கு வசதியாகவும் அமைந்துள்ள விசாலமான பிளாட்பார்மில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான இடம் பஸ் நிலையத்தின் பின்புறம் ஒதுக்கிவிட்டு, பஸ்களை நிறுத்த ஏற்பாடு செய்தால், பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எனவே, இரண்டு பிளாட்பார்ம்களில் மட்டுமே தற்போது அனைத்து பஸ்களும் நிறுத்தப்படுகிறது. அதனால், பஸ் நிலையத்துக்குள் செல்லும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள், புறப்பட்ட பிறகு பயணிகளுக்கான நுழைவு பகுதியில் சில நிமிடம் காத்திருக்கும் வாகனங்கள் என, பஸ் நிலையத்தின் எல்லா திசையிலும் வாகனங்கள் சூழ்ந்து கடும் நெரிசல் காணப்படுகிறது.
அதனால், பஸ் நிலையத்துக்குள் பஸ்களை தேடி செல்லும் பயணிகள் தடுமாறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்களை அழைத்துக்கொண்டு லக்கேஜ்களுடன் பஸ் நிலையத்தில் செல்லும் பயணிகளின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. எந்த நேரத்திலும் விபத்தில் சிக்கும் ஆபத்துடன் ஒவ்வொரு பஸ்சாக கடந்து கடந்து, தங்களுடைய பஸ்சை கண்டறியும் நிலையில் உள்ளனர்.
மேலும், எந்தெந்த ஊருக்கு எந்தெந்த இடத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது என்கிற வழிகாட்டி பலகையும் இல்ைல. பஸ் நிறுத்துமிடங்களில் எழுதியுள்ள ஊர்களுக்கான பஸ்கள், அந்த இடத்தில் நிற்பதும் இல்லை. பஸ்களை முறைப்படுத்த தேவையான போக்குவரத்துத்தறை ஊழியர்களும் அங்கு போதுமான எண்ணிக்கையில் பணியில் இல்லை.
மேலும், நேர காப்பாளர் அறை, பயணிகளுக்கு உதவும் அறைகள் முழுமையாக செயல்படவில்லை. பஸ் நிலையத்தில் அமைந்துள்ள காவல் உதவி மையம் செயலற்று மூடிக்கிடக்கிறது. பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கூட பணியில் இல்லை. செவ்வக பரப்பில் பரந்து விரிந்துள்ள புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் பாதுகாப்பாற்ற நிலை காணப்படுகிறது.
எனவே, இரவு நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. பஸ்கள் நிறுத்தாமல் காலியாக உள்ள பிளாட்பார்ம்கள் ‘குடிமகன்கள்’ உறங்கும் இடமாக மாறியிருக்கிறது. அதனால், பயணிகள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியில்லை. பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், தற்ேபாதுள்ள கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும், அமருவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் முழுவதும் கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்கவும் இடமின்றி பயணிகள் தவிக்கின்றனர்.
திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்காக, பயணிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட புதிய பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்காததால், தினமும் பயணிகள் வேதனைப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய பஸ் நிலையத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை முறைப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
நடை மேம்பாலம் விரைந்து அமைக்கப்படுமா?
புதிய பஸ் நிலையத்தில் இருந்து நகருக்குள் வந்து செல்ல வசதியாக ரயில்வே பாதையின் குறுக்கே நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பயணிகள் வசதிக்காக ரயில் பாதையின் குறுக்கே 7 மீட்டர் உயரம் மற்றும் 30 மீட்டர் நீளத்தில் நடைமேம்பாலம், நகரும் நடைமேடை, மின் தூக்கி (லிப்ட்) ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து அமைக்கப்படுகிறது. ஆனால், கலெக்டர், எம்பி ஆகிேயார் நேரடி ஆய்வு செய்த பிறகும், பணிகள் மந்தமாகவே நடக்கிறது.
தற்போது புதிய பஸ் நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளதால், இப்பணியை முழு வீச்சில் நிைறவேற்றி முடிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இப்பணிகள் முழுமையடையாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். ஏற்கனவே, இந்த பகுதியில் இருமுறை விபத்து நடந்த பிறகும், போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனவே, நடை மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகும்.
சிக்கலை ஏற்படுத்தும் சர்வீஸ் சாலை
புதிய பஸ் நிலையத்தையும், நகரத்தையும் இணைக்கும் ஒரே வழி, ரயில்வே மேம்பாலம் மட்டுமே. எனவே, பாலத்தை ஒட்டி இருபுறமும் அமைந்துள்ள சர்வீஸ் சாலைகளையே வாகன ஓட்டிகள் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், சர்வீஸ் சாலையில் இருபுறமும் அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலையை இணைக்க ரவுண்டானா வசதியில்லை. அதற்காக, வாகனங்கள் திரும்புவதற்கு தற்போதுள்ள இடமும் வெகு தொலைவில் உள்ளன.
எனவே, பாலத்தில் இருந்து நேரடியாக சர்வீஸ் சாலைக்கு வாகனங்கள் திரும்புகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும், சர்வீஸ் சாலையை கடந்து செல்லும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் முறைப்படுத்த வேண்டும், அதேபோல், பெரியார் சிலை சந்திப்பு பகுதியில் வாகனங்கள் கடந்து செல்வதில் உள்ள சிக்கல்களுக்கும் தீர்வு காண வேண்டும்.
