புதுச்சேரி போலி மருந்து விவகாரம் – அதிகாரி மாற்றம்

புதுச்சேரி: அதிகாரி அனந்தகிருஷ்ணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரி அனந்தகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ‘கியூ’ பிரிவு போலீசார் கடந்த மாதம் ராமேஸ்வரம் கடற்பகுதியில் நடத்திய சோதனையில், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு இலங்கைக்குக் கடத்த முயன்ற போலி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஹெல்த் கேர் நிறுவனத்தில், மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் புதுச்சேரி மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அந்த நிறுவனத்திற்குச் சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பூத்துறையில் இயங்கி வரும் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான குடோனில், தமிழக மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய மூன்று நாள் ஆய்வில், 625 வகையான மருந்துகளைப் போலியாகத் தயாரித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில், விரிவான விசாரணை நடத்தப் புதுச்சேரி காவல் துறை (டி.ஜி.பி.) சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது

முதற்கட்ட விசாரணையில், மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து உற்பத்தி நிறுவனங்களில் உரிய ஆய்வு நடத்தாததே இந்த போலி மருந்து விவகாரத்திற்கு முக்கியக் காரணமாகத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான அனந்தகிருஷ்ணனைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிப் புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் போலி மருந்து விவகாரம் வெளியான மறுநாளே, புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலரான முகமது யாசின் அதிரடியாக மிசோராம் (Mizoram) மாநிலத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: