முதல்வர் தொகுதியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்: வீடியோ வைரல்

பெரம்பூர்: தமிழக முதல்வர் விஜய்யின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரில் சென்று தரக் கட்டுப்பாடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பொருட்களையும் வழங்கினார்.

இந்நிலையில், முதல்வரின் சொந்த தொகுதியிலேயே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் ஆர்.வி.நகர் செலவாயில் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இருந்து மொத்தமாக அரிசி மூட்டை மூட்டையாக எடுத்துச் செல்லும் வீடியோ நேற்று வைரலானது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வைத்து மொத்தமாக ஒருவர் அரிசி மூட்டைகளை கொண்டு செல்லும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் அரிசி, நியாயவிலைக் கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக இருசக்கர வாகனங்களில் ஏற்றி, பின்னர் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ந்து கண்காணிப்பு, ஆய்வுகளை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: