நடைபயிற்சியில் ஈடுபட்ட போது கீழ்ப்பாக்கத்தில் முகமூடி அணிந்து ரூ.50 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்: பணத்தை பெறும் போது 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானம் அருகே நடைபயிற்சி செய்த தொழிலதிபரை முகமூடி அணிந்து வந்த கும்பல் ரூ.50 லட்சம் பணம் கேட்டு கத்திமுனையில் கடத்தி சென்றனர். இதில் பணத்தை பெறும் போது போலீசார் 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் கமலேஷ் ஆபிரகாம்(57). தொழிலதிபரான இவர், சென்னை சேத்துப்பட்டில் தற்போது வசித்து வருகிறார். இவர், சவுகார்பேட்டையில் அலுமினியம் மொத்த வியாபாரமும், திருவேற்காட்டில் பழைய இரும்பு வியாபாரமும் நடத்தி வருகிறார். வழக்கம் போல் கமலேஷ் ஆபிரகாம் நேற்று காலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்திற்கு அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று, தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாமை கத்திமுனையில் காரில் நடத்தினர். அப்போது தொழிலதிபர் சத்தம் போட்ட போது, மர்ம கும்பல் தங்களிடம் துப்பாக்கி இருப்பதாகவும், சத்தம் போட்டால் சுட்டு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தொழிலதிபர் சத்தம் போடாமல் இவர்களுடன் சென்றுள்ளார். அப்போது மர்ம கும்பல் பூந்தமல்லி நோக்கி காரில் செல்லும் போது, ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு தொழிலதிபர் ரூ.1 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு மர்ம நபர்கள் உங்களை கொல்ல ரூ.10 லட்சம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு தொழிலதிபர் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு ஒரு வழியாக பேரம் பேசி ரூ.30 லட்சம் பணம் தருவதாக தொழிலதிபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் தொழிலதிபரை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் பணம், செல்போன் பெற்றுக்கொண்டு, அவர் அணிந்து இருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றனர். பிறகு ரூ.50 லட்சம் பணம் கேட்டு தன்னை கடத்திய சம்பவம் குறித்து தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விசாரணை நடத்தி வந்தனர். அதற்கிடையே தொழிலதிபரை கடத்திய கும்பல் பணம் கேட்டு மீண்டும் தொழிலதிபரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது தொழிலதிபர் பணம் ஏற்பாடு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். உடனே எதிர் முனையில் பேசிய நபர் பணத்துடன் பிராட்வேயில் உள்ள தேநீர்கடை அருகே பணத்தை கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதுகுறித்து தொழிலதிபர் போலீசாரிடம் தெரிவித்தார். பிறகு போலீசார் யோசனைப்படி பணத்துடன் தொழிலதிபர் பிராட்வே பகுதிக்கு சென்றுள்ளார். அவரை ரகசியமாக போலீசாரும் பின் தொடர்ந்தனர்.

ஒரு கட்டத்தில் தொழிலதிபரிடம் பணத்தை பெறும் போது அங்கு மறைந்து இருந்த போலீசார், 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு அவர்களிடம் விசாரணை நடத்திய போது, வடசென்னையை சேர்ந்த ஜெயக்குமார்(33), ஜெய் சரவணன்(20), ராம்குமார்(23), பொன்னிவளவன்(25) என தெரியவந்தது. கடத்தப்பட்ட தொழிலதிபர் மீது ஜிஎஸ்டி மோசடி மற்றும் கள்ள நோட்டுகள் பயன்படுத்திய வழக்கு நிலுவையில் இருப்பதை தெரிந்துகொண்டு, அவரை திட்டமிட்டு காரில் கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதைதொடர்ந்து, போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: