சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள குண்டுக்கல் ஊராட்சி ராமப்பகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (85). இவரது மனைவி அமராவதி (70). இவரது மகன் மாதேஷ், தனது குடும்பத்துடன் கொண்டிரெட்டியூர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். முதியவர்கள் இருவரும் ஜோடுகுளியில் இருந்து சின்னதிருப்பதி செல்லும் பகுதியில் சாலையை ஒட்டிய ஒலக்கூர் புளியமரத்து பஸ்நிறுத்தம் அருகே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இருவரும் தென்னை மட்டைகளை பின்னும் தொழில் செய்து வந்தனர். இவர்களது பேரன் நவநீதன் என்பவர், தினமும் இவர்களுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில், தாத்தா-பாட்டி வீட்டுக்கு வந்த போது, இருவரும் தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, சத்தம் போட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், தம்பதியை மர்ம நபர்கள் கட்டையால் தலையில் சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, சேலம் மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம், ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் ஆகியோரும் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி அமராவதி காது, மூக்கில் அணிந்திருந்த தங்கத் தோடு, மூக்குத்தி ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
