வாலாஜா அருகே வன்னிவேடு கிராமத்தில் துணிகரம் கோயில் பூட்டை உடைத்து தங்க நகை, பஞ்சலோக கவசங்கள் திருட்டு

*தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை

வாலாஜா : வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சப்த முனிவர்களில் முதன்மையான ஸ்ரீ அகத்தியர் தவமிருந்து ஈஸ்வரரை வழிபட்ட திருத்தலமாகவும், ஷடாரண்ய தலங்களில் மிக முக்கியமாக போற்றப்படும் அக்ஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது.

இந்து கோயிலில் தினமும் 8 மணிக்கு நடைதிறந்து இரவு 9 மணிக்குள் கோயில் நடை சாற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் காலை கோயில் நடை திறக்கப்பட்டு, இரவு நடை சாற்றப்பட்டது.

பின்னர் மனோஜ் குருக்கள் நேற்று காலை கோயிலுக்கு வெளி கதவை திறந்து உள்ளே வந்தார். அப்போது உள் பிரகாரத்தின் பிரதான இரும்பு கேட் மற்றும் அதன் உள்ளே மரகதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது மூலஸ்தான கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த மூலவர் மீது அணிவிக்கப்பட்டிருந்த செம்பிலான நாகபரணம் திருடப்பட்டிருந்து‌.

மேலும் மூலஸ்தான வெளிபுறத்திலிருந்த உண்டியை உடைத்தனர். ஆனால் உள்தாழ்பாளை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது. மேலும் புவனேஸ்வரி அம்மன் சன்னதி கதவு உடைக்கப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்ட அரை சவரன் தாலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

மேலும் உள்பிராகரம் தூர்க்கை அம்மன் அருகே இருந்த இரும்பு பிரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த அம்மன், சனிபகவான், கால பைரவரர், குருபகவான், உள்ளிட ஐந்து பரிவார தெய்வங்களுக்கு அணிவிக்ககூடிய தங்கபூலாம் பூசப்பட்ட பஞ்சலோகத்திலான கவசங்கள் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து பல்வேறு கோணங்களில் ரேகைகளை பதிவு செய்து சென்றனர்.

ஒரே கோயிலில் 43வது முறை திருட்டு குற்றவாளிகளை பிடிக்காத போலீஸ்

அக்ஸ்தீஸ்வரர் கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த திருட்டு 43வது திருட்டு ஆகும். ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவத்தால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த கோயில் ஊருக்கு வெளிப்புறத்தில் இருப்பதாலும் ஆள் நடமாட்டம் இல்லாததாலும் போதை ஆசாமிகள் கை வரிசையை காட்டி கிடைத்த வரை சுருட்டி சென்றுள்ளனர். இந்த தடவையாவது உண்ணமை குற்றவாளியை போலீசார் கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: