சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குண்டுக்கல் ராமப்பகோட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். அவரது மனைவி அமராவதி. இந்த வயதான தம்பதிகள் அந்த பகுதியில் குடிசை அமைத்து தென்னைமட்டை பின்னும் தொழில் செய்துவருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவர்களது பேரன் நவனீதன் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து காவல்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். இந்தனை தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், DIG ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திவருகின்றனர். மூதாட்டியின் தோடு, மூக்குத்தி ஆகியவை திருடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகைகளை திருடுவதற்காக இந்த கொலை நடந்துள்ளதா..? அல்லது சொத்து தகராறு காரணமாக கொலை நடந்துள்ளதான என போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வயதான தம்பதியினர் கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
