*ரயில்வே போலீசார் நடவடிக்கை
ஜோலார்பேட்டை : மேற்கு வங்க மாநிலம் மிக்கனாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்கான் (28),கேரளாவில் கூலி வேலை செய்கிறார். இந்நிலையில், தனது மனைவி ஹினா மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் காச்சிகுடாவில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக கர்நாடக மாநிலம் கும்டா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 18ம் தேதி இரவு குடும்பத்துடன் பொது பெட்டியில் பயணம் செய்தார்.
இந்த ரயில் காட்பாடி-ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே வந்தபோது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சிவகுமார் (57) என்பவர், குட்கா போதை பொருளை குழந்தையின் வாயில் திணித்ததாக தெரிகிறது.
இதனை அதே பெட்டியில் பயணம் செய்த ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த முரளி(39) உள்ளிட்ட சிலர் தட்டிக்கேட்டனர். அப்போது சிவகுமார் மற்றும் அவரது நண்பரான புத்தகுண்டா ரெட்டி ஆகிய இருவரும் சேர்ந்து முரளியை தாக்கினராம்.
இதுகுறித்து முரளி குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார். ரயில் ஜோலார்பேட்டையில் நின்றவுடன் ரயில்வே போலீசார் குழந்தையின் வாயில் போதைப்பொருள் திணித்த சிவக்குமார் மற்றும் புத்தகுண்டா ரெட்டி (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக ரயில்வே மருத்துவ குழுவினர் குழந்தையை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
