மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் 8 பேர் பாளை சிறைக்கு மாற்றம்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் (34), பெட்டிக்கடையில் கடந்த 9ம் தேதி 14 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த தென்தாமரைக்குளம் போலீசார், அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 13ம் தேதி அதிகாலையில் சிறைக்குள் வைத்து சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குபதிந்து சிறை வார்டன் ெஜகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் 8 கைதிகள் என 11 பேரை கைது செய்தனர். இதில் சிறை வார்டன், சிறை காவலர் உள்ளிட்ட 3 பேரும் நாங்குநேரி சிறையில் உள்ளனர். கைதிகள் 8 பேரும், நாகர்கோவில் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் இவர்களையும், சிறை வார்டன் ஜெகன் உள்ளிட்டோரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினர்.

இதற்கிடையே சபரிவர்மன் கொலை நடந்ததாக கூறப்படும் சிறையின் அறை லாக் செய்யப்பட்டு, அங்கிருந்த கைதிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொலை நடந்த அறை சீல் வைக்கப்பட்டுள்ளது. சபரிவர்மன் கொலை தொடர்பாக மாற்று திறனாளிகள் அமைப்பினர் கூறுகையில், முதலமைச்சர் விஜய் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக எந்த கருத்தும் கூறவில்லை. மாற்று திறனாளிகள் துறையை தன் வசம் வைத்துள்ள அவர், ஒரு மாற்று திறனாளி சிறையில் கொல்லப்பட்ட சம்பவத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

Related Stories: