பெரம்பூர் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடியில் திட்டங்கள்: மாநகராட்சி ஆணையருக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை: பெரம்பூர் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்வரும், பெரம்பூர் எம்எல்ஏவுமான விஜய் நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது: பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளேன். இந்த அனைத்து பணிகளும் உடனே தொடங்க சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி,

* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பால சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில், சிசிடிவி, வைபை மற்றும் 24 மணி நேர கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.

* மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

* கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த அம்பேத்கர் கலைக் கல்லூரிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும்.

* சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரக சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும்.

* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ‘தற்காலிக பணியாளர்களுக்கான’ ஓய்வறை அமைக்கப்படும்.

* அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் உருவாக்கப்படும்.

* அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.
இந்த அனைத்து பணிகளையும் உடனடியாக தொடங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பரிந்துரைத்துள்ளார்.

Related Stories: