சென்னை: சென்னையில் மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முதல் பணி நியமன ஆணையை மேடையிலிருந்து கீழே இறங்கி முதல் வரிசையில் அமர்ந்துள்ள மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவ அலுவலருக்கு முதல்வர் விஜய் வழங்கினார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர் சிறப்பு சிகிச்சைகள் வழங்குவதற்காக, உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில், பெரிய தொழில் நிறுவனங்கள்,
பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) மற்றும் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து நன்கொடை பெற்று வெளிப்படையான, பொறுப்புணர்வுடன் கூடிய முறையில் செயல்படுத்த ‘‘நலம் TN” (www.tnhealthfoundation.org) தொடங்கி வைத்தார்.
மேலும் 139 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களையும் பயன்பாட்டிற்காக முதல்வர் விஜய் தொடங்கி தொடங்கி வைத்தார். இதற்கிடையில் மேடையில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது ‘அன்பு சாம்ராஜ்யம்’. ஒரு நோயாளியின் பாதி நோய் மருத்துவரின் கனிவான வார்த்தைகளிலேயே குணமாகிவிடும்.
முக்கியமாக, ‘நாம் நலமாகிவிடுவோம்’ என்ற நம்பிக்கை பிறக்கும். அந்த நம்பிக்கையைக் கொடுப்பதுதான் ஒரு மருத்துவரின் முதல் கடமை, முதல் பணி. மருத்துவர்களைப் போலவே சுகாதார ஆய்வாளர்களுடைய பணியும் மிகவும் உன்னதமானது. ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்துகிறார், சுகாதார ஆய்வாளர்கள் நோய் வராமல் தடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் எடுக்கக்கூடிய பெரும் பொறுப்புடையவர்கள். அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் அல்ல, இல்லை.
அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வரும்பொழுது வெறும் நோயோடு மட்டும் வருவதில்லை, இந்த அரசு தங்களை நிச்சயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள். இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்கின்ற போதிலும், ‘அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி’ என்ற லட்சிய பாதையில் நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகவே உள்ளது. இன்னும் பல அரசு மருத்துவமனைகளில் தூய்மையான கழிவறை, சுற்றுச்சுவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குடியிருப்பு போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்னொரு புறம், போதிய அளவிலான டயாலிசிஸ் மெஷின்கள், லீனியர் ஆக்சலரேட்டர் (Linear Accelerator) போன்ற நவீன புற்றுநோய் சிகிச்சை உபகரணங்களும் அதிக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இந்த மகத்தான மக்கள் பணியில் நாம் அனைவரும், மக்கள் அனைவரும் பங்கெடுக்கக்கூடிய அரிய வாய்ப்புதான் இந்த ‘நலம் TN’ தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
