மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல்; ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

ஆம்பூர், ஜூலை 13: ஆம்பூர் டாஸ்மாக்கில் தொடர்ந்து பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதால் மதுப்பிரியர்கள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் ஒரு மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அவ்வாறு தர மறுத்தால் மதுபானம் தருவதில்லை எனவும் மதுபிரியர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி அந்த கடையில் மதுபிரியர்கள் சிலர் மதுபானம் வாங்கி உள்ளனர். அதற்கு கடை ஊழியர் 2 பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 வசூலித்துள்ளார். இதனால் மதுபிரியர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று முன்தினம் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைரலானது.

அதில் அந்த கடை ஊழியர், மதுபாட்டில்கள் ஏற்றி வர செலவினங்கள், உடையும் பாட்டில்களுக்கான கூடுதல் செலவு தொகை ஆகிறது. இதை யார் தருவது? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அரசு உத்தரவை மீறி பல்வேறு அரசு மதுபான கடைகளில் தொடர்ந்து இவ்வாறு மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் என கூடுதல் தொகை வசூலிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: