ஆற்காடு, ஜூலை 13: மேல்விஷாரம், சோளிங்கர் நகராட்சிகளில் தெருநாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி ஆணையர் மேகலா தலைமையில் நகராட்சி தலைவர் குல்ஜார் அஹமத், துணைத் தலைவர் ஜபர் அஹமத் ஆகியோர் முன்னிலையில் மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள தெருக்களில் பொதுமக்களுக்கு நாய்களால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல் மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட 2,6,7,10 ஆகியவார்டுகளில் உள்ள தெருக்களில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கும், தெருகளில் சுற்றி திரியும் நாய்களுக்கும் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் உதவி கால்நடை மருத்துவர் மோகன், துப்புரவு ஆய்வாளர் கண்ணன் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், கால்நடை பராமரிப்பு அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினரால் நேற்று 30 தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நகராட்சி பகுதியில் தொடர்ந்து நடைபெறும். அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் சுமார் 5 முதல் 10 தெரு நாய்கள் வரை சுற்றித்திரிகிறது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உள்ளனர். மேலும், இரவு நேரங்களில் தெருக்களில் நடமாட முடியவில்லை என்றும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர்.
எனவே நகராட்சி சுகாதார ஆய்வாளர் தேவிபாலா தலைமையில் கால்நடை மருத்துவர் அருள்மொழி மற்றும் நகராட்சி பணியாளர்கள் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். கோளாத்தம்மன் கோவில், அண்ணா நகர், வட்டார வளர்ச்சி அலுவலகம், வாரச்சந்தை, பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர். இதுவரை 59 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 323 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து நகராட்சியில் உள்ள அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
