ரூ.300 மின் கட்டணம் செலுத்திய சமையல் தொழிலாளிக்கு ரூ.19,426 பில் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய  வீட்டுக்கு ரூ.21,000 மின் கட்டணம்: இலவச மின்சாரம் 200 யூனிட் எனக்கூறி தவெக அரசு குளறுபடி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய வீட்டுக்கு ரூ.21 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் தொழிலாளி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பிடாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(45). சமையல் தொழிலாளி. இவருக்கு மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். மாதம் ரூ.15 ஆயிரம் வருமானம் ஈட்டி குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது வீட்டிற்கு ரூ.300 முதல் ரூ.400 வரை மட்டுமே மின் கட்டணம் வந்துள்ளது.

இந்த முறை திடீரென ரூ.19,426 மின் கட்டணம் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று, தனது வீட்டில் 2 மின் விசிறி, ஒரு டிவி, பிரிட்ஜ் மட்டுமே உள்ளதால் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என விளக்கம் கேட்டுள்ளார். ஆனால் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் முழுத்தொகையையும் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

2 நாட்கள் அவகாசம் கேட்டபோதும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்தும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றும் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளார். இதுபோல், அதே பகுதியில் பல ஆண்டுகளாக 100 யூனிட் இலவச மின்சார சலுகை பெற்று, ரூ.500க்கும் குறைவாக மின் கட்டணம் செலுத்தி வந்த ராஜலட்சுமி என்பவருக்கு ரூ.21 ஆயிரம், சரண்யா என்பவருக்கு ரூ.12 ஆயிரம், ஷீலா என்பவருக்கு ரூ.26 ஆயிரம் மற்றும் குப்பங்குழி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு ரூ.41 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டபோது, கடந்த சில மாதங்களாக மீட்டர் அளவீடு எடுத்த ஊழியரின் அளவீடு பதிவு செய்வதில் ஏற்பட்ட தவறே இதற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும் சிலர் உங்களுக்கு இது அபராதத் தொகை, அதனை கண்டிப்பாக செலுத்த வேண்டும், இல்லையெனில் மின்சாரத்தை துண்டித்து விடுவோம் எனக் கூறி மிரட்டியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: