சென்னை: தமிழ்நாட்டில் பாஜ வரக்கூடாது என்பதுதான் ஒரே குறிக்கோள், பாஜவுடன் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது என்று திருமாவளவன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். முதல் கூட்டத்திலேயே ரூ.18.64 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகள் இடையே பேசியதாவது: சனாதனத்தை பேசும் திருமாவளவன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்கிறார் என கேட்கிறார்கள். அவர்களுக்கு அது தெரியாது, திருமாவளவன் என்கின்ற தலைமைத்துவத்தை தமிழகத்தில் சிதைக்க வேண்டும் என காழ்ப்புணர்ச்சியோடு சிலர் பேசுகிறார்கள். தேர்தலில் ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொண்டதை பற்றி ஏன் யாரும் விவாதம் நடத்தவில்லை.
ஆனால் திருமாவளவன், திமுகவுடன் சென்றால் மட்டும் பேசுகிறார்கள். திமுக தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை, அதைவிட அதிமுக கண் முன்னரே சிதைத்து விடுகிறார்கள் என்பது ஒரு கவலை. அதைவிட திராவிட கட்சிகளை ஒதுக்கிவிட வேண்டும் என பெரியார் காலத்திலிருந்து ஒரு முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் பிஜேபி மீது எந்த வெறுப்பும் கிடையாது.
எனக்கு பிறந்தநாள் என்பதால் காலை, மதியம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைபவ் ஆகிய 2 பேரும், தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக காலத்தில் இருந்து ஒரு கட்சியில் இருந்து மறுகட்சி பேசுவது வழக்கம் கொள்வது என்பது கிடையாது. அந்த மரபை உடைத்தவன் தான் திருமாவளவன். திமுகவும், தவெகவும் ஒரே எதிரி பாஜதான். கேரளாவில் காங்கிரசும், இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும், காங்கிரசும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது?.
