சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட “பாரம்பரிய மீன்பிடி திருவிழா” இன்று மிக உற்சாகமாக நடைபெற்றது. நெடுமரம் கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடப்பு பருவம் முடிந்த நிலையில், தற்போது நீர் மட்டம் குறைந்து வற்றத் தொடங்கியது. இதனையடுத்து, கிராமத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில், பாரம்பரிய வழக்கப்படி கச்சா மற்றும் ஊத்தா முறைகளைப் பயன்படுத்தி இன்று காலை 9 மணி அளவில் மீன் பிடித்துக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பைக் கேட்டு, அதிகாலை முதலே நெடுமரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த 3,000-திற்கும் மேற்பட்ட மீன்பிடி ஆர்வலர்களும், பொதுமக்களும் கையில் ஊத்தா, கச்சா, போன்ற மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாய் கரையில் குவிந்தனர். காலை 9 மணிக்கு கிராமத்தினர் வெள்ளைக்கொடி அசைத்து காட்டிய பின்பு, கரையில் ஆவலோடு காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஒரே நேரத்தில் “ஹோ” என்ற உற்சாக முழக்கத்துடன் கண்மாய்க்குள் குதித்தனர். அப்போது கண்மாய் பகுதியே திருவிழா கோலம் பூண்டு, மக்கள் கடலாகக் காட்சியளித்தது.
ஜாதி, மத பேதமின்றி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேற்றில் இறங்கி, போட்டிப் போட்டுக் கொண்டு மீன்களை அள்ளிய காட்சி, நம் முன்னோர்களின் கூட்டு நெறியையும், பாரம்பரியத்தையும் நினைவுபடுத்துவதாக அமைந்தது. இந்த மீன்பிடித் திருவிழாவில் நாட்டு வகை மீன்களான கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால் என ஏராளமான மீன்கள் மக்களுக்குக் கிடைத்தன. எதிர்பார்த்ததை விடப் பெரிய அளவிலான மீன்கள் கையில் சிக்கியதால், மீன்பிடி ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தங்களுக்குக் கிடைத்த மீன்களைத் தங்களது பைகளிலும், கூடைகளிலும் அள்ளிக்கொண்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை விருந்துக்காக மக்கள் உற்சாகத்துடன் இல்லம் திரும்பினர்.
மழை வேண்டி, இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா, நெடுமரம் கிராமத்தில் உறவுகளையும், ஊர் ஒற்றுமையையும் பலப்படுத்தும் ஒரு உன்னத நிகழ்வாக நிறைவு பெற்றது.
