போடி : போதிய மழையில்லாததால் போடி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வரும் கொட்டகுடி கூலிங்காறும், அதைச் சார்ந்துள்ள மூக்கரை பிள்ளையார் மெகா தடுப்பணையும் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ள பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் பாசனம் மற்றும் மழைநீர் பாசனம் மூலம் தென்னை, வாழை, ஆலைக்கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் கொட்டகுடி ஆற்றுக்கு மேலே உள்ள சாம்பலாற்று ஊற்று அணை மிகவும் விவசாயிகளுக்கு நீர் ஆதரமாக உள்ளது.
மழைக்காலங்களில் கொட்டக்குடியாற்றிற்கு, சாம்பலாற்று மெகா தடுப்பணை கடந்து ஆங்காங்கே உருவாகி வரும் சிறு சிறு அருவிகள் யாவும் மொத்தம் ஒன்று சேர்ந்து காட்டாறு வெள்ளமாக பெருக்கெடுக்கும். அந்த வெள்ளநீர் பங்காருசாமி கண்மாய், சங்கரப்பநாயக்கர் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், சிறுகுளம், தாசன் செட்டிகுளம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கண்மாய் குளங்களை சென்றடைகிறது.
கடந்த சில மாதங்களாக போதிய மழையில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையும் பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.குறிப்பாக போடி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து புறப்படும் கொட்டக்குடியாறு, போடி கடந்து தேனி மூலவைகைஅ ஆற்றில் சேரும். இந்நிலையில் இந்த ஆறு தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் மூக்கறை பிள்ளையார் மெகா தடுப்பணை, துரைராஜ புரம் காலனி பகுதியில் இருக்கும் தங்கப் பாலம் உள்பட நீண்ட ஆற்றில், தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. மேலும் குடிநீருக்கும் தற்போது பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
