திம்பம் மலைப்பாதையில் லாரி சக்கரம் அச்சு முறிந்து பழுது: தமிழக-கர்நாடக இடையே வாகன போக்குவரத்து பாதிப்பு

 

சத்தியமங்கலம் : தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலை பாதை அமைந்துள்ளது.இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருதுநகரிலிருந்து பால் பாக்கெட் செய்ய பயன்படுத்தப்படும் பாலிதீன் பாரம் ஏற்றிய லாரி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்வதற்காக திம்பம் மலைப் பாதை வழியாக நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

லாரியை கர்நாடக மாநிலம் குஷால்நகர் பகுதியைச் சேர்ந்த முத்தாலி (65) ஓட்டினார். மலைப்பாதையில் உள்ள 9வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது திடீரென லாரியின் முன்பக்க அச்சு முறிந்து பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால், மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியை பழுது நீக்கும் பணி நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின் லாரி பழுது நீக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டு நின்றதால் தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திம்பம் மலை பாதையில் 16.2 அளவு உள்ள பாரம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என விதிமுறை உள்ள நிலையில் அளவுக்கு அதிகமாக கூடுதலாக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் அனுமதிக்கப்படுவதால் லாரிகள் பழுது ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: