* நோயாளிகள், உறவினர்கள் கடும் அவதி
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், குவியல் குவியலாக கொட்டிக்கிடக்கும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ள நிலையில் நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக செயல்பட்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 1997ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு, 29 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், திருவள்ளூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டு, சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. பின்னர், கடந்த 6 ஆண்டுகளாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு, 1500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன், அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை கட்டிடம் மற்றும் உபகரண வசதிக்கேற்ப இதுவரை மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனையாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு வைக்கப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளாக அகற்றாத அவலம்
திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் மருத்துவமனையாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை பிரிவு கட்டிடத்தின் பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான மாத்திரைகள் இசிஜி எடுக்க பயன்படுத்தும் பேப்பர் ரோல்கள், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், கண் அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் விழித்திரை லென்ஸ்கள் உள்ளிட்டவைகள் பாழடைந்த கட்டிட அறையில் இன்னமும் அகற்றப்படாமல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003 முதல் 2016 வரை உபயோகப்படுத்தப்படும் தேதி அச்சிடப்பட்டு காலாவதியாகி 10 ஆண்டுகளுக்குப் பின்பும் இன்னுமும் அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அதை தெரியாமல் பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்கிற சூழ்நிலை உள்ளதால், அவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மேலும் இவ்வளவு மருந்துகள் மாத்திரைகள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் ஏன் பயன்படுத்தாமல் வீணானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வீணான அரசு நிதி
ஒவ்வொரு மாதத்திற்கும், ஒவ்வொரு வருடத்திற்கும் இவ்வளவு மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் தான் தேவைப்படும் என்ற கணக்கின்படி உபயோகப்படுத்தி இருந்தால், இவ்வளவு பொருட்கள் அரசுக்கு வீணாகி நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்காது. எனவே உடனடியாக இவற்றை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான மருந்து மாத்திரைகள் மருத்துவ உபகரணங்களை அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும்,பொது மக்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உடனடியாக நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. மேலும், கடுமையான துர்நாற்றம் வீசுவதால் மருத்துவமனையில் குழந்தைகளை பெற்ற பெண்களும், குழந்தைகளும், நோயாளிகளும் இருக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
உடனடி நடவடிக்ைக தேவை
எனவே, இதுபோன்று காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ள மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன் முறையாக அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து நோயாளிகளையும், நோயாளிகளையுடன் வரும் உறவினர்களையும், கர்ப்பிணி பெண்களையும், பிறந்த குழந்தைகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற மாவட்ட கலெக்டரும் மருத்துவமனை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் கத்திருக்கின்றனர்.
