மதுராந்தகம்: நகரமயமாக மாறிவரும் சாலவாக்கம் ஊராட்சியில் தனியார் வங்கி இல்லாததால் 20 கிமீ தூரம் வரை கிராம மக்கள் அலைகின்றனர். மேலும் ஏடிஎம் வசதியும் இன்றி பணம் எடுக்கவும் சிரமப்படுவதால் உடனே நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் சாலவாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு 1,855க்கும் மேற்பட்ட வீடுகளில் 7000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதி கிராம ஊராட்சி என்ற போதிலும் சிறிய நகரம் போன்று 150க்கும் மேற்பட்ட கடைகளுடன் பஜார் பகுதியாக உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி கிளாக்காடி, புலிப்பாக்கம், சிறு பினாயூர், மாம்பாக்கம், ஆலப்பாக்கம், அண்ணாத்தூர், எடமச்சி, பொற்பந்தல், இடையம்புதூர், பாலேஸ்வரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த சாலவாக்கம் கிராமத்தில் மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், வேளாண்மை அலுவலகம், நில அளவை அலுவலர் குடியிருப்பு, அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக ஒரே ஒரு வங்கி மட்டுமே செயல்பட்டு வருகிறது. அங்கு தினமும் காலை முதல் மாலை வரை கூட்டம் அலைமோதும். அங்கு வங்கி சேவையை பெற முடியாமல் கிராம மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் மற்றொரு வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 20 கிமீ தூரம் சென்றுதான் மற்றொரு வங்கியை சென்றடைய முடியும், அங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.
இந்த சூழலில்தான் சாலவாக்கம் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நகரமயமாக மாறிவரும் இந்த சாலவாக்கம் ஊராட்சியில் மேலும் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் உடன் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனியார் வங்கியை உடனடியாக அமைத்து செயல்படுத்தக்கூடிய அளவிற்கு கட்டிட வசதிகளும் இந்த கிராமத்தில் உள்ளது. எனவே தனியார் வங்கிகள் இந்த பகுதியில் தொடங்கினால் நல்ல வரவேற்பை பெறும். மேலும் வங்கியில் பணம் செலுத்துதலும், பெறுதலும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த கிராமத்தில் தனியார் வங்கி அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயிகள் கவலை
சாலவாக்கம் கிராமத்தை ஒட்டி 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு நகைக்கடன் பெற முடிவதில்லை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் கிராம மக்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு பதிவிறக்கம் செய்ய முடிவதில்லை. அரசு நேரடி நெல் கொள்முதல்
நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் தினமும் கவலை அடைகின்றனர்.
வங்கிகள்
ஏற்படுத்தினால் கிராமம் வளர்ச்சி பெறும்:
சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், மருத்துவமனை, தபால் நிலையம், வேளாண்மை விரிவாக்கம் மையம், பொது நூலகம், மின்சார அலுவலகம், உள்ளிட்ட அலுவலகங்கள் இங்கு செயல்படுகிறது இதே பகுதியில் தனியார் வங்கி ஒன்று ஏற்படுத்தினால் மேலும் இந்த கிராமம் வளர்ச்சி பெறும்.
பணமாக எடுக்க முடியாமல் அவதி
சாலவாக்கம் கிராமத்தை ஒட்டி நிறைய தொழிற்சாலைகளும், கல்குவாரிகளும், அலுவலகங்களும் உள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வங்கி மூலமாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் வாங்கிய சம்பளத்தை பணமாக எடுத்துச் செல்ல முடியாமல் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
